Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Saturday, September 30, 2006

கவிதைத்துளிகள்

என் மனங்கவர்ந்த மக்கள் டிவி காட்சியை பற்றி என் முந்தைய பதிவை பார்த்திருப்பீர்கள்.

அதில் நான் இன்று ரசித்தது சுவையான கவிதை நிகழ்ச்சி.

வழங்கிய கவிஞரோ திலீபன் கண்ணதாசன் என்பவர். முன்னால் எனக்கு பரிச்சயமில்லாத பெயர். அவரின் பல கவிதைகளை வாசித்தார். நிறம்ப நன்றாக இருந்தன. சில பொசபொசத்து போயின.

என் ஞாபகத்திலிருந்து எனக்கு பிடித்த மூன்று கவிதைகள் இதோ எழுதியிருக்கிறேன். வரிகள் வார்த்தைகளில் சிறிது மாற்றமிருக்கலாம். ...

**********************************

தேடிக்கொண்டிருக்கிறேன்


அவசரமாக ஊருக்குப்போகவேணுமுன்னு ஆயிரத்து நூறு ரூபாய் வாங்கிப்போன கருப்பனையும்,


முப்பத்து முக்கோடி கடவுள் சாச்சியாய் மூணே மாதத்தில் அசலூரில் வேலே நிச்சயமுன்னு மூணு சேவல் ஐநூத்தி ஒரு ரூபா வாங்கிப்போன பூசாரியையும்


ஆணுக்கொன்னு, பெண்ணுக்கொன்னு தனி கழிப்பறை கட்டித்தருவேனுன்னு வாக்கு குடுத்த எம்மெல்லேவையும்...

தேடிக்கொண்டிருக்கிறேன்


******************

முரண்

மனைவி மக்களுடன் கடைவீதியில் போய் வரும்போதுதான் கண்ணில் படுகிறாள் என் பழைய காதலி.

மாதக்கடைசியில் கடிதம் போடாமல் வந்து சேருவார்கள் குடும்பத்தோடு விருந்தினர்கள்.

மருந்து சாப்பிட்டு குணமாகி வீடு திரும்பும்போது அழைப்பிதழோடு வந்து சேருவார்கள் என் நண்பர்கள்...


************************


சோத்துக்கட்சி
வந்துவிட்டது தேர்தல் மாதம். சர்சர் என்று நாலைந்து பிளைமூத்தும் காரும் வந்தது.

தெருவுக்கு தெரு நாலு குழாய் கட்டி பாட்டு

விடிய விடிய எம்ஜியார் சிவாஜி படம் போட்டு கொட்டகாயில் கொண்டாட்டம்.

வெள்ளையும் ஜொல்லையும் ஏக ஆட்கள் ஆரத்தி எடுத்தால் தட்டில் காசு

வீட்டில் அம்மா சொன்னாள். ஒன்னுக்கும் கவலையில்லை. அடிச்சி சாப்பிட்டா ஒரு மாதம் நீ அரிசிக்கஞ்சி.

***********

Wednesday, September 13, 2006

மகிழ்ச்சி தரும் மக்கள் டிவி

போன வாரம் திடீரென்று ஒரு புதிய தமிழ் டிவி சென்னை கேபிளில் வந்தது.

ஒரு பெரிய கொட்டாவியுடன் என்ன என்று பார்த்தேன்.


என் கொட்டாவிக்கு காரணம் இருக்கிறது.. ஒவ்வொரு ஆடி, தைக்கு தவறாமல் ஒரு சேனல் ஆரம்பித்து பின்பு அட்ரஸ் இல்லாமல் போகிவிடுகின்றன. இப்போதைக்கு, தமிழன், வின் ரெண்டு சேனல்கள் அரைகுறை தெம்பில் ஓடிக்கொண்டிருக்கின்றன. (அதற்கு துபாய் பைசைவே காரணம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்). மா டிவி போல பல தமிழ் டிவிக்களை ‘சூரிய’ குழுமம் எரித்துவிட்டதால் சென்னையில் சிக்னல் வருவதில்லை. காஞ்சி சங்கராச்சாரியார் ஆரம்பித்த ‘இந்து டிவி’ மலேசியாவோடு நின்றுவிட்டது. சென்னையில் அதுக்கு எழுதப்படாத தடா!! இப்படி பல சேனல்கள் குறைப்பிரசவங்களாகி போயிருக்கின்றன.

இது ப.ம.க ராமதாஸ் ஐயாவின் டிவி என்று பின்பு தெரிந்துகொண்டேன்.


நான் முதலில் இந்த சேனலை பார்த்தபோது, மக்கள் டிவி ஆரம்ப விழாவை காட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரே மஞ்சள் துண்டு மயமாக தெரிந்தது. “சரிசரி! மங்களமாய்தான் ஆரம்பித்திருக்கிறார்கள், ‘குரு’ பார்வை இருக்கிறது. கொஞ்சம் வளர சான்ஸ் இருக்கிறது” என்று நினைத்துக்கொண்டேன்.




டாக்டர் (ஜூனியர்) அன்புமணி வேட்டிக்கட்டிக்கொண்டு இழுத்துஇழுத்து விட்டுக்கொண்டு சங்கடமாக உட்கார்ந்திருந்தார்.

மணி, சீனியர் மருத்துவர் ஐயா என்று பலரும் மேடையில். பேராண்டியும் பிரசென்ட். மேடையில் பேண்ட் போட்டிருந்த ஒரே பிரகஸ்பதி அவர்தான்.

ஆகா, கலக்கல்தான் என்று சந்தோஷமாய் இருந்தது!

என் கவனத்தை மேலும் இழுத்தது மருத்தவர் ராமதாஸ் ஐயா அவர்களின் பேச்சுதான்! ராமதாஸ் ரொம்பவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

ராமதாஸை பற்றிய பிரபலமான பல அபிப்ராயங்கள் எனக்கும் உண்டு. அவர் சாதிப்பிரியர் என்பது தெரியும். அது ஒரு குறைதான்.

ஆனால், அவரால் பல நல்ல காரியங்கள் நடந்திருக்கின்றன என்பதால் அவரிடத்தில் எனக்கு மரியாதை.

ஆரம்பத்தில், முடங்கிக்கிடந்த கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த குறுகிக்கிடந்த பாதைகளை அகலப்படுத்தும் வழியாக அவர் குறுக்கே வளர்ந்திருந்த பல பச்சை மரங்களை அப்புறப்படுத்தினார். அதற்கப்புறம்தான் தமிழகம் பொருளாதார ஹைவேயில் முன்னேற ஆரம்பித்தது.

நடுவில், தமிழக பண்பாட்டை கூறுபோட்டு விற்று காசு பார்க்க முயன்ற பல அதிராவிட (திராவிடமல்லாத) கூத்தாடி கூட்டங்களை சுளுக்கு எடுத்து, அவர்கள் எல்லாம் ரொம்பவும் அனாகரீகமாக நடிக்க பயப்படும்படி செய்ததில் அவரை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

சமீபத்தில், மார்க்கெட்டுக்கு ஏத்தாற்போல் பார்ட்னரை மாற்றும் சீரழிந்த சிங்காரிகளின் "புரட்சி பெண்ணிய" கொள்கைக்கு விளக்குமாற்றை பரிசாக கொடுத்து அவர்களை சிங்கப்பூருக்கு ஓட வைத்ததில் அவரிடம் எனக்கு அலாதி மரியாதை.

எல்லாவற்றுக்கும் மேலாக, சமீபத்தில் இந்த அம்மையாரின் ஆட்சியை மூட்டை கட்ட சப்போர்ட் கொடுத்தவர் என்று அவரிடத்தில் ஒரு பிரியம்.

அவர் தமிழ் பண்பாட்டு மற்றும் மொழி பிரியர். அதை அரசியலுக்காக மட்டும் கையில் எடுக்காமல், உணர்வு பூர்வமாக ஆதரிப்பவர் என்றுதான் தோன்றுகிறது. பொதுவாகவே, எது பண்ணிணாலும் அதை உணர்வுபூர்வமாக அவர் பார்த்து செய்வார். அன்றும் அப்படியே!!

அன்று அவரின் பேச்சும் அப்படியே இருந்தது. ரொம்பவும் வினயமாகவும் பேசினார். கலைஞரை இந்த சேனலை ஆதரிக்க கெஞ்சினார்.

“இந்த சானலில் தமிழ்பண்பாட்டுக்கு இணக்கமான நிகழ்ச்சிகளே வைப்பாம். எங்கள் கட்சி கொள்கைகளை வைக்கமாட்டோம்’ என்றார். நம் டோண்டு ஐயாவின் தர்க்க சாத்திரப்படி பார்த்தால், அவரது கட்சிகொள்கைகள் தமிழ்பண்பாட்டை விட்டு விலகியவை என்று ஆகிறது. புன்னகை வந்தது!

ஒரு வாரமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் டிவி ரொம்பவும் தன்மையாக, மனதை வருடும் இளம் தென்றலாக போய்க்கொண்டிருக்கிறது.


எப்போதும் மனநிறைவை தரும் ப்ரொக்ராம்களாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!!

காலையில் வில்லுப்பாட்டு, வள்ளுவம். பின் கவிதை. பின் புதுமைப்பித்தன் கதைகள் மற்றும் இலக்கியம். மாலையில் நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை வரலாற்றை தொடராக. பின் செய்திகள். பின் லோகல் பிரச்சனைகளை தீர்க்க விவாதம். இப்படி போகிறது, தற்போதய தினசரி நிகழ்ச்சிகள்.

இதுவரை சன் கேபிள் காரர்கள் மக்கள் டிவி சிக்னலை நன்றாக விட்டுவைத்திருக்கிறார்கள். இரண்டு மூன்று நாட்கள் fringe band ல் வந்தது இப்போது மெயின் frequency ல் விட்டுள்ளார்கள். தெளிவாக இருக்கிறது.

நான் டிவி பார்ப்பது ரொம்பவும் குறைச்சல். எல்லா ‘அரைகிழ’ங்களை போலவே நானும் தினசரி வாழ்க்கையை தள்ளுவதிலேயே எனர்ஜி போய்விடுகிறது. இரவு குழந்தைகளோடு போய்விடுவதால் டிவியில் ஆசை போய்விட்டது. பொதிகை பார்க்கலாம் என்றால், மூத்த-பேராண்டியின் புண்ணியத்தில் சிக்னல் சரியாக வராமல் என்னமோ ரூபவாஹிணி பார்ப்பது போல் இருக்கிறது.

இரவில் சில சமயம் வேலை செய்ய வேண்டி லாப்டாப்பும் கையுமாக உட்கார்ந்தால் நான் பார்ப்பது சில காமெடி காட்சிகள். 10 மணிவாக்கில் காமெடி காட்சிகள் போடுவது சரியான டைமிங் சென்ஸ். அப்படி காமெடி போரடித்தால் விண், தமிழன் டிவிகள் பார்ப்பேன். அதில் ‘இஸ்லாத்தின் பெருமை’ என்று காமெடி பண்ணிக்கொண்டிருப்பார்கள்.

என் டிவி தேவை அவ்வளவே!!

இதற்கு மாறாக, மக்கள் டிவியில் எல்லா காட்சிகளுமே இதமாக இருக்கிறது. என்க்கு பிடித்த வில்லுப்பாட்டு காலையில் பார்க்கிறேன். மாலையில், நாதஸ்வர வித்வான்
ராஜரத்தினம் வாழ்க்கையை சீரியலாக அழகாக காட்டுகிறார்கள்.

இரவில், சேவை-தேவை என்று லோகல் பிரச்சனைகளை காட்டுகிறார்கள்.

உதாரணத்துக்கு மடிப்பாக்கத்தில் பாம்புகள் வீட்டுக்குள் வந்து படுத்துவதாக ஒரு அம்மணி ரொம்ப நேரம் பேசினாள். (இந்த பிரச்சனைக்கு நம் தமிழ்மண மன்றத்தின் மடிப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ இலக்கிக்கு (லக்கியை தமிழ்படுத்தியிருக்கிறேன். கண்டுகொள்ளாதீர்கள்...) ஏதாவது தொடர்பா தெரியவில்லை!!)

ஐயப்பன்தாங்கலில் பஸ் வசதி, சைதாப்பேட்டையின் ரேஷன் கடை என்று பல லோகல் விஷயம். என்னடா இது, சர்வதேச டிவியில் அடையாறு-டைம்ஸ் ரேஞ்சுக்கு லோகல் விஷயமா என்று எனக்கு இடறினாலும் நன்றாக இருந்தது. உருப்படியாக பண்ணுகிறார்கள்.

எனக்கு பிடித்த right of information act தொடர்பு பண்ணி பல பிரச்சனைகளை அலசி மதியம் ஒரு காட்சி வருகிறது. பெயர் சட்டென்று ஞாபகம் வரவில்லை.

எல்லாவற்றையும் விட, செய்திகளை நடுநிலையில் தருகிறார்கள். மஞ்சள் கலரை போலவே பச்சை கலரும், கருப்பு கலரும் தென்படுகிறது. (எலட்சன் சமயத்தில் எப்படியோ, பார்க்கவேண்டும்!!) செய்தி வாசிப்பவர்கள் சுத்தமாக தமிழ் படிக்கிறார்கள். அதைவிட, காரேபூரே என்று டிரஸ் பண்ணிக்கொள்ளாமல் பாந்தமாக அடக்கமாக ஆனால் அழகாக இருக்கிறார்கள்.

மற்ற ‘பணக்கார’ சேனலில், செய்தி படிக்கும் ஆண்கள் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு சோளக்கொள்ளை பொம்மையாட்டம் இருப்பதும், பெண்கள் என்னவோ மணமேடை ஜோதிகா மாதிரி பட்டும் ஜொட்டுமாக வருவதும் செயற்கையாக இருக்கிறது.

இங்கு அப்படியெல்லாம் இல்லை. தலையில் மல்லிகைப்பூ, அழகான பொட்டு என்று சிம்பிள் டிரஸ். அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள்.

காட்சிகளில் பணக்காரத்தனம் இல்லை. ஏழைக்கேத்த எள்ளுருண்டை. பட்ஜெட் இடிக்கிறதோ என்னமோ! இது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

மாறாக, தமிழகத்தின் நம்.1 டிவி சேனலில் காட்சிகள் எப்போதுமே கிறுக்குத்தனமாக இருக்கும். காமெடி காட்சி தொகுத்து வழங்குகிறேன் என்று சொல்லி ஒரு இளம்பெண் இறுக்கமான சட்டை போட்டுக்கொண்டு மரத்தின் மேலே ஏறி உட்கார்ந்திருந்து கொண்டு, கெக்கப்புக்கே என்று கொஞ்சி பேசுவாள்.

சினிமாபாட்டு டாப்-10 என்று சொல்லி கிராமத்தான் வேஷம் போட்டு ஒருத்தர் உடம்பெல்லாம் சந்தனம் பூசி அசடு வழிவார். மீண்டும் மீண்டும் சிரிப்பு டிராமா என்று சொல்லி ஒரு எழுபது வயது கிழவர் இரட்டை அர்த்தத்தில் புர்ரர்ரர்ர் என்று சவுண்ட் விடுவார்... இன்னும் எத்தனையோ!!

ஆனால், மக்கள் டிவியில் காட்சிகளை கண்ணாபிண்ணாவென்று அமைக்காமல் ஒரு மதிப்பாக அமைக்கிறார்கள். தமிழ் நன்றாக பேசுகிறார்கள்.

சமீபத்தில் எல்லோருக்கும் பிடித்த "தமிழ்" சிக்குன்-குனியா ஜூரம் மக்கள் டிவியையும் பிடித்துவிட்டது. அதாவது 'ஜில்லென்று' என்பதை விட 'சில்லென்று' என்று சொன்னால் தமிழ் என்ற அபிப்ராயம். அதனால், பங்கேற்கும் சிலர் பேரை ‘தமிழ்படுத்தி’ போடுகிறார்கள் (ஜெயலக்ஷ்மியை ‘செயலட்சுமி’ போல). இது எப்போதும் இல்லை. மற்ற சமயங்களில் மறந்துபோய் ஜ, ஸ சேர்த்து போடுகிறார்கள். (ஒருவேளை ஜ, ஸ மாறாமல் போடுபவர்கள் இன்னும் திராவிட சர்டிபிகேட் வாங்கவில்லையோ என்னவோ).

மற்றபடி வேறு குறை சொல்ல முடியாது!!

ஆரம்பத்தில், ராமதாஸ் பேசும்போது ‘திரைப்பட காட்சிகள் ‘அவ்வளவாக’ வராது. கூடுமானவரை!!’ என்றார். நான் இந்த டிவியில் இதுவரை ஒரு சினிமா ப்ரொக்ராம் கூட பார்க்கவில்லை. அதற்கு அவருக்கு ஒரு சபாஷ்!!

இப்படி சுக்குத்தண்ணீராக இருந்தால் இதை யார் பார்ப்பார்கள், இந்த சேனல் தாக்குப்பிடிக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இது நன்றாக ஓடவேண்டும் என்பது என் ஆசை. (நான் ‘அன்பேசிவம்’ கூடத்தான் நன்றாக ஓடவேண்டும் என்று ஆசைப்பட்டேன்..!!)

ஆனால், இப்போது சமுதாயம் இளவட்டங்களின் கையில் அல்லவா இருக்கிறது. அவர்களை எப்படி குத்துப்பாட்டு சேனலிருந்து நகர்த்துவது???? பதில் தெரியவில்லை.