Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Wednesday, June 21, 2006

வாசுவும் ஜெனிபர் லோபசும்

ரொம்ப நாளைக்கு அப்புறம் இரண்டுவாரம் முன்னால் வாசுவை அபிராமபுரத்தில் பார்த்தேன். சிக்னலில் பச்சைக்காக நின்றுகொண்டிருந்தான். என்னைப்பார்த்து கையை மட்டும் ஆட்டிவிட்டு அவசரமாக போய்விட்டான்.

ஆறு மாதம் கழித்து வாசுவை பார்ப்பதால் அவன் இன்னும் ஒரு சுத்து பெருத்திருப்பது தெரிந்தது. வழக்கம் போல ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் வாசுவின் பரப்பளவு ஏறிக்கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் இதற்கு மேல் இவனால் முடியுமா என்று நினைப்பேன், ஆனால், அவன் சாதித்துக்காட்டுவான்.

இந்த லைப்பில் ஏறினால் இறங்காத விஷயங்கள் இரண்டு. ஒன்னு விலைவாசி. இன்னொன்னு வாசுவின் உடம்பு. (மூனாவது, ரிசர்வேஷன் என்கிறீர்கள்தானே? அது எனக்கும் தெரியும். ஆனால், அந்த சண்டைக்குள் இப்போது போக வேண்டாம்..)

ஆனால், வாசு ஒல்லியாக வெடவெட என்று இருந்த காலமும் உண்டு. வாசுவை எனக்கு ஒரு 30 வருஷமாக நன்றாக தெரியும். திருவல்லிக்கேணி ஹிண்டு ஹைஸ்கூலில் என் பெஞ்ச் மேட். ஸ்கூலில் பளபள என்று ரவுண்டு முகத்தில் அழகாக ஸ்ரீசூர்ணத்துடன் எப்போதும் பிரஷ்ஷாக இருப்பான். அசப்பில் பார்த்தால் சின்னவயசு நடிகை பானுமதி மாதிரி. இப்போதும் அழகன்தான்.

ஆனால், ஒரே வித்தியாசம். அப்போதெல்லாம் ஒல்லியாக வெட வெட என்று இருப்பான்.

சி.ஏ. சேர்த்து முடித்தோம். நான் எல்.அன்.டி க்கும் அவன் டி.வி.எஸ் ஸூக்கும் போனோம். வேலை பார்க்க ஆரம்பித்ததில் இன்னும் இளைத்தான். நாங்கள் பந்தக்கால் என்று கேலி பண்ணுவோம். அப்புறம், ரொம்ப தைரியம் வந்து (அவனுக்கில்லை. அவன் அம்மாவுக்கு....) வேலைக்கு துபாய்க்கு போனான்.

வருடா வருடம் லீவுக்கு வரும்போது அவசியம் வந்து பார்த்துப்போவான். துபாய் போனதில் அவன் திருமண் போனது. ஆனால், அவன் இன்னும் ஒல்லியாகத்தான் இருந்தான்.

துபாயில் கல்யாணமாகி அவர்களுக்கு பையன் பிறந்தான். பையனோடு முதல் தடவை மெட்றாஸூக்கு வந்த போது ஆள் வெயிட் போட்டு பூசினால் போல் ஆகியிருந்தான்.

'என்னடா, தொந்தி. “பைசா சேரச்சேர தொப்பையும் பெருக்குமோ?” என்றேன்.

அவன் மனைவி பத்மா சிரித்துக்கொண்டே எல்லாம் எங்க அம்மாதான் காரணம் என்றாள். தூக்கிவாரிப்போட்டது.

அதாவது, துபாய்க்கு குழந்தையையும் பத்மாவையும் பார்த்துக்க வந்த மாமியாரின் பஞ்ச பக்ஷங்கள் மற்றும் உபசாரங்கள் என்று அர்த்தமாம். பத்மா என்னவோ எப்போதும்போல பஞ்சத்தில் அடிபட்டவள் மாதிரிதான் இருந்தாள். அவள் அம்மாவின் உபசாரம் அவளை தேற்றவில்லை என்று புரிந்தது.

'எனக்காக நெய்யும் பட்சணமும் பண்ணி வைப்பா, அம்மா. அதை இவர்தான் சாப்பிடுவார்....' என்று பத்மா லேசாக சிரித்தாள். வாசு வெட்கப்பட்டான்.

பின்னால், வருஷா வருஷம் ஒவ்வொரு தடவையும் இண்டியா விஜயத்தின் போது இன்னும் விஸ்தாரமானான். அரச புரசலாக பத்மாவிடம் விஜாரித்ததில் மெஷினெல்லாம் துபாயில் வாங்கி அது பாட்டுக்கும் தூங்குவதாக சொல்லி ஆதங்கப்பட்டாள்.

என் நண்பன் வாசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.

கொஞ்ச வருஷம் கழித்து துபாயை காலி பண்ணிக்கொண்டு மெட்றாஸ் திரும்பிய போது வாசு புல் ஷேப்பில் வந்திருந்தான். அவன் கழுத்து காணாமல் போயிருந்தது.

ஒருநாள் சாயங்காலம் நாரத கான சபாவில் ஒரு பாடகியின் அறுவை கச்சேரியில் (அவள் ராகத்தை விட புடவையே பளிச்சென்று இருந்தது. அந்த கச்சேரிக்கு போனதில் எனக்கு ஒரு புடவை செலவு...) அவனை பார்த்தேன். உடம்பை குறைக்க ஏதோ மாஸ்டரிடம் போவதாக சொன்னான். மிஸ்டர் குப்தாவாம். ரொம்ப எக்ஸ்பர்ட்டாம். மெட்ராஸில் எல்லா நடிகர்களுக்கும் அவர்தான் டய்டீஷியனாம். அதோடு அரபிக்ஸ் வேறு கத்துக்கொடுப்பாராம். என்னையும் சேர சொன்னான்.

நான் அதுவரை ஏதோ அரபிக்ஸ் என்றால் துலுக்கர்களின் பாஷை என்றுதான் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால், குப்தாவின் அரபிக்ஸில் உடம்பு இளைக்குமாம்.

என் இடதுபக்கத்துக்காரி வேறு நீங்களும் சேருங்களேன் என்றாள். ஆனால், அவன் சொன்ன பீஸை கேட்டதுமே நான் இளைத்துதான் இருக்கிறேன் என்று சொல்லி விட்டேன்.

பின் ஒருநாள் அவன் வீட்டிற்கு போயிருந்தேன். ஒன்னும் இளைக்க காணும்.

“என்னடா ஆச்சு குப்தா மாஸ்டர்” என்றேன்.

அவன் 'எல்லாம் சுத்த ஹம்பக், ஜெயராமா! பத்தாயிரம் ரூபாயும் பத்து கிலோவும் உடனே குறைந்தது. பின்னாடி, ஒரு மாசத்துல, பதினைந்து கிலோவா திரும்பி வந்துடுத்து. ரூபாயைத்தான் திரும்ப காணோம்” என்றான்.

பத்மா உடனே குறுக்கே பேசினாள். 'எக்சர்சைஸ் பண்ணிதான் கொறைக்கணும். இந்த டயட் விஷயங்லாம் டெம்பரரிதான் தெரியுமோ’ என்றாள்.

வாசு அசடு வழிந்தான். “என்னதான் சொல்லு. யோகாப்யாஸம் மாதிரி ஆகாதுடா. அதுல இல்லாததா. இப்போ ஒரு பர்ஸ்ட்கிளாஸ் யோகா ட்ரையினிங் சேர்ந்திருக்கிறேன். திருமூலர் யோக நிலையம். ரங்காச்சாரி ரோடில. அற்புதமா போறது' என்றான்.

சரியான ‘சற்றும்-மனம்-தளரா-விக்கிரமாதித்தன்” தான்.

எப்படியோ இளைத்தால் சரி என்று வாழ்த்திவிட்டு வந்தேன்.

இது நடந்து சில மாதங்களுக்கு பின், ஒருநாள் என் பார்யாள் வாசு வீட்டுக்கு போய் வந்தாள். வந்ததும் கிண்டலாக ‘உங்க பிரண்ட் வாசு ஒரே ஜெனிபர் லோபஸ் படமா மாட்டி வைச்சிருக்கார் வீட்டில’ என்று சொன்னாள்.

எனக்கு ஒரே ஆச்சரியம்

இதற்காகவே, ஒருநாள் மாலை அவன் வீட்டிற்கு போனேன். வாசு என்னிக்கும் இல்லாத திருநாளாய் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். நான் பார்த்தே இராத ஒரு சேனலில் V என்று மஞ்சள் கலரில் போட்டு இங்கிலீஷ் பாப் ம்யூஸிக். டிவியில் ஜெனிபர் லோபஸ் நெறுக்கி முறுக்கி குனிந்து நிமிர்ந்து பாடிக்கொண்டிருந்தாள். பாட்டு ஒன்றும் புரியவில்லை. அது என்ன வீடியோவோ தெரியவில்லை. என்னவோ டப்டப் என்று போட்டோ ஆல்பம் மாதிரி வேகமாய் மாறிக்கொண்டே இருந்தது. பாட்டை விட படங்கள் சூடாக இருந்தது.

நான் வந்ததை வாசு கண்டுக்கவே இல்லை. ‘என்னடா இது டிவில்ல கண்றாவி” என்றேன். ‘நல்லா கேளுங்க...’ என்று பத்மா ஒத்து ஊதினாள்.



இதுதான்டா ஜெனிபர் லோபச் என்றான். என்னமா சிக்குன்னு இருக்கா பாரு (சத்தியமாய் அவன் வார்த்தைகள்....) உடம்பு கண்ட்ரோலுக்கு என் ரோல் மாடல்டா என்றான். “டய்ட்டில் இருக்கிறவர்களுக்கு இது மாதிரி ரோல் மாடல்தான் சரியான மோடிவேஷன் தெரியுமோ” என்றான்.

அவனுக்கு வீட்டில் சாப்பாட்டு கட்டுப்பாட்டில் கஷ்டப்படுகிறான் என்று தோன்றியது.

போதாதக்கு அவன் ரூமில் வேறு ஜெனிபர் படம் மாட்டி வைத்துக்கொண்டிருந்தான். (அந்த போட்டோவை நெட்டில் தேடி இங்கு போட்டிருக்கிறேன்)

அப்புறம் பெரிய லெக்சர் கொடுத்தான். ஜெனிபர் லோபஸ் எவ்வளவு உயரம், எடை, அவள் என்ன எக்சர்சைஸ் பண்ணுகிறாள். என்றெல்லாம் ஏகத்துக்கு பேசினான். ஜெனிபர் லோபஸின் தமிழக ரசிகர் தலைவராக இருப்பான் போல.

'இதிலே ஆச்சரியம் தெரியுமோ. ஜெனி (இப்படி சுருக்கிதான் சொன்னான்) ஒரு டயட்டும் இல்லாமல் இவ்ளோ சிக்குன்னு இருக்கா தெரியுமோ. எல்லாத்தையும் எப்போதும் சாப்பிடறாளாம்' என்று ஏக்கத்துடன் சொன்னான்.

'ஜெனி மாதிரி பாடி வெச்சுண்டா என்னத்த வேணுமானாலும் சாப்பிடலாம் ' என்று தீர்மானமாக சொன்னான்.

அது என்னவோ மெடோபாலியோ என்னவோ ஒன்று உடம்பில் இருக்கிறதாம். அது வேகமாக ஓடினால், உடம்பு பெருக்காதாம். எனக்கு அவ்வளவாக புரியவில்லை. இருந்தாலும். என் மடத்தனத்தை காட்டிக்காமல் ஆமாம், ஒகோ, பேஷ் என்றெல்லாம் போட்டேன்.

இன்னும் சில மாதங்கள் பிறகு, அவன் வீட்டுக்கு என் மனைவியுடன் ஒருநாள் வாசு வீட்டுக்கு போயிருந்தேன்.

ஏழெட்டு ஆப்பிள், நிறைய ஆரஞ்சுப்பழம் இன்னும் என்னொன்னவோ கலர் கலராக நிறைய அடுக்கி வைத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

எனக்கு இதைப்பார்த்ததும் ஆச்சரியமாய் இருந்தது. 'என்னடா வாசு, டயட்டெல்லாம் இல்லையா' என்றேன்.

அவன் சிரித்தான். “ஜெயராமா. உனக்கு லேட்டஸ்ட் சயன்ஸ் தெரியல போலருக்கு. டயட்டால உடம்பு கொஞ்சமும் இளைக்காதுன்னு கண்டு பிடிச்சிருக்கா' என்றான்.

“அதெப்படிடா. பின்ன இளைக்க என்ன பண்ணனும்?” என்று கேட்டேன்.

'அப்படிக்கேளு! உடம்பு இளைக்க நிறைய சாப்பிடணும்’ என்றான். இது என்னடா கூத்து என்று நினைத்துக்கொண்டேன்.

‘அதாவது நெகடிவ் புட்..' என்றான்.

நான் திருதிரு என்று முழித்தேன். அவன் என் அறியாமையை பார்த்து இன்னும் சந்தோஷமானான். உடனே ஒரு லெக்சர் குடுத்தான்.

அவன் சொன்னதிலிருந்து எனக்கு தெரிந்தது இதுதான். நெகடிவ் காலரி புட் என்று பல ஐடங்கள் இருக்கிறதாம். நிறைய பழங்கள், காய்கறிகள் இதில் சேர்த்தி. அந்த சாமான்களை எத்தனை சாப்பிட்டாலும் பெருக்காதாம். மாறாக, ஒவ்வொரு முறை அவற்றை சாப்பிடும்போதும் உடம்பு இன்னும் இளைக்குமாம்.

'இதெப்படிடா சாத்தியம். இதெல்லாம் ஏமாற்று வேலை' என்றேன்.

'போடா முட்டாள். இதுதான் லேட்டஸ்டாக கண்டு பிடித்திருக்கிறார்கள். இங்க பாரு” என்று ஒரு புஸ்தகத்தை வேறு காட்டினான்.

“அதாவது, உதாரணத்துக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடம்பில் 20 கலோரி குறையும். தெரியுமா. அப்படியே தினசரி பத்து ஆப்பிள் சாப்பிட்டால், 200 கலோரி குறையலாம். எவ்வளவுக்களவு சாப்பிடறயோ அவ்வளவு இளைக்கலாம்” என்று சொல்லிவிட்டு கூடையிலிருந்து இன்னொரு ஆப்பிளை எடுத்து ஆசையாக கடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

(பின்னால் வீட்டுக்கு வந்து அவன் சொன்ன புஸ்தகத்தை இன்டர்நெட்டில் பார்த்தேன். இம்மாதிரி ஒரு கூத்து இருக்கிறது நிஜம்தான்)

என்னிடம் பத்மா வருத்தப்பட்டாள். 'இவர் கூத்து தாங்கமுடியவில்லை. தினசரி நூறு ரூபாய்க்கு மேல என்னத்தயோ வாங்கிண்டு வந்து சாப்பிட்டா இளைக்கும் என்று நன்றாக சாப்பிட்டுவிடுகிறார்' என்றாள்

சோபாவில் ஒரு கூடையில் ஏதோ தழைகள் வேறு பரத்தியிருந்தது. அதில் ஒரு கெட்டியான தண்டை எடுத்து வாயில் கடித்துப் பார்த்தேன்.

வாசு துடித்துப்போனான். ‘டேய் அசடு. அதை தொடாதே’ என்றான்.

என்னடா என்றேன்.

‘டேய் இது என்ன தெரியுமா? இது சிலேரி’ என்றான்.

எனக்கு ஹிலேரியைத்தான் தெரியும். கிளின்டனின் அபிஷியல் மனைவி.

“இது என்ன விலை தெரியுமா?. மெட்ராஸில் எவ்வளவு கஷ்டப்பட்டு நான் தேடிப்பிடித்து வைத்திருக்கிறேன். சும்மா ஆடு மாதிரி மேயாதே’ என்று கோபித்தான்.

இது நடந்து பல மாதம் கழித்துதான் இந்த அபிராமபுரம் சிக்னல் நிகழ்ச்சி.

சிக்னலில் அவனைப்பார்த்த பின் அடுத்த வாரம் என் வீட்டுக்கு வந்திருந்தான். ரொம்பவும் சாந்தமாக முகம் மலர்ந்து இருந்தான். பெருத்த உடம்பு நடந்தாலே மூச்சுவாங்கியது.

‘எங்கடா அவசரமா அன்னைக்கு போனே?’ என்றேன்.

என் வீட்டரசி விருந்தினருக்கு சில ஸ்வீட்ஸ் கொண்டு வைத்தாள். டயட்காரன் ஸ்வீட்டா சாப்பிடுவான்.

நான் என் மனைவியிடம் வேற ஏதாவது லைட்டா குடு என்றேன். “இல்லை இருக்கட்டும்” என்று ஸ்வீட் தட்டை பக்கத்தில் நகர்த்திக்கொண்டான். எனக்கு ஆச்சரியம்.

“ஏது ஸ்வீட். நன்னாருக்கே’ என்றான்.

‘குழந்தையை பார்க்க ஊரிலிருந்து என் அம்மா வந்திருந்தாள். கொண்டு வந்திருந்தாள்’ என்றாள் என் மனைவி. பிறந்த வீட்டு பெருமையில் முகம் மலர்ந்தது.

‘பேஷ். பேஷ்... அதான் ஜோரா இருக்கு. இன்னும் என்ன வந்தது’ என்று கேட்டான்.

என் மனவியோ சந்தோஷமாக மைசூர்பாகும் நாடா பகோடாவும் கொண்டு வந்தாள்.

‘சபாஷ். க்ருஷ்ணா ஸ்வீட்டா! என்னமா போடறான். ஆனா, இந்த பார்முலா சீக்ரெட் அவுட் ஆயிடுத்தாமே’ என்று கேட்டுக்கொண்டே இரண்டு விண்டு வாய்க்குள் போட்டுக்கொண்டான்.

‘நாடா பகோடா உங்க அம்மா பண்ணினதா. ரொம்ப நன்னா இருக்கு’ என்று மைசூர் பாகுக்கு சைடாக தொட்டுக்கொண்டான்.

என் மனைவி இன்னும் பிறந்த வீட்டு பெருமையில் ‘அம்மா திரட்டிப்பாலும் கொண்டுவந்தா. கொஞ்சம் சாப்பிடுங்க...’ என்று அது வேறு வந்து இறங்கியது.

நான் மெதுவாக ‘வாசு, போனவாரம் பிஸியோ” என்று கேட்டு வைத்தேன்.

வாசு வாயில் மைசூர்பாகோடு தலையை ஆட்டினான். ‘அது ஒன்னும் இல்லடா. என் யோகா டீசர் மண்டய போட்டுட்டார். காலங்கார்த்தால ந்யூஸ். அதான் வேகமா போய்க்கிட்டிருந்தேன்’ என்றான்.

எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

‘ராத்திரி படுத்தவர்டா. கார்த்தால எழுந்திருக்கல. என்னமா யோகா பண்ணுவார்... அவங்க ப்ராப்தம் படிதான் நடக்கும். இந்த எக்சர்சைஸ், யோகா, டயட் எல்லாம் சுத்த ஹம்பக், ஜெயராமா! அவர் ஜென்மா முழுக்க யோகாதான் பண்ணினார். என்ன பிரயோசனம்? டயட்டாவது ஒன்னாவது. எல்லாம் உடம்பு வாகு. இதுக்காக கண்ட்ரோல் எல்லாம் சுத்த மடத்தனம்’ என்றான்.

வாசு முகத்தில் ஒரு ரிலீப் தெரிந்தது. ரொம்ப வருஷங்களுக்கு பிறகு அவன் தன் உடம்புடன் சமாதானம் செய்து கொண்டு விட்டான் என்று நினைக்கிறேன்.

போகப்போக பார்க்க வேண்டும்...


===================


இது ஒரு உண்மை நிகழ்ச்சி. என் நண்பன் வாசுவுக்கு ப்ளாக் படிக்கும் கெட்ட பழக்கம் இல்லை என்பதால் தைரியமாக எழுதினேன். யாராவது வாயை வைத்துக்கொண்டு வம்பு பண்ணாதீர்கள்

8 Comments:

At 7:22 am, Blogger Muse (# 01429798200730556938) said...

ஜெயராமன் ஸார்,

கலக்கிருக்கீங்க. நல்ல ஹாஸ்யம். ஒரு நல்ல கதை படித்த உணர்வு ஏற்படுகிறது.

இது போல பல எழுத வாழ்த்துகிறேன். ஓஸியில் நல்ல இலக்கியங்கள் படித்து ரொம்ப நாளாயிற்று :-) !

 
At 7:28 am, Blogger Muse (# 01429798200730556938) said...

படத்திலிருக்கிற அக்காதான் ஜெனிஃபர் லோபஸா? முதலில் சாப்பாட்டுக்கு வழியில்லாத ஸோமாலியா தேஸத்துப் பெண்மணி என்று நினைத்தேன். எலும்பும் தோலுமாய் பாவம். ட்ரெஸ் வாங்கக்கூட பணமில்லை போல. இது போன்ற ஏழைகளுக்கு நம்மூரு கம்யூனிஸ்ட்டுகள் உதவுவார்கள் என்று நினைக்கிறேன்.

 
At 7:49 am, Blogger VSK said...

கலக்கல் காமெடி!!
சிரித்துக்கொண்டே மூடும் பதிவுகளில் இதுவும் ஒன்று!:)
என்ன ஒரு வித்தியாசம்னா...
திரும்பி மேலே போய் ஜெ.லோ.வை இன்னொருதரம் ஆசை தீர பார்த்துவிட்டு மூடினேன்!!
நெறயப் பேருக்கு இன்னிக்கு ஒரு ஸ்க்ரீன் ஸேவர் கொடுத்திருக்கீங்க!

[துடைச்சுக்கோ, வழியற ஜொள்ளைன்னு சொல்றது கேக்குது!!:))]

 
At 8:34 am, Blogger நன்மனம் said...

ஜயராமன் சார்,

:-D

நல்ல வேலை வீட்ல படிச்சேன், சத்தமா சிரிக்க முடிஞ்சுது.

இந்த பதிவ ஒரு பிரிண்டு எடுத்து வெச்சு வாரத்துல ரெண்டு நாளாவது படிச்சா நல்ல டென்சன் ரிலீவர்...

அருமையான காமெடி.

(வாசு சார மன்னிக்க சொல்லுங்க....)

 
At 9:15 am, Blogger கோவி.கண்ணன் said...

ஜெயராமன் சார் ... நல்ல இன் டரஸ்டிங்கா ... இருக்கேன்னு படித்துக் கொண்டே ஸ்க்ரோல் பண்ண ... ஜெனி படம் வரவும்... அருகில் என் மனைவி வரவும்... எனக்கு என்ன நடந்திருக்கும்னு அதுக்கு மேல சொல்ல ... வேண்டாம் :)))

 
At 12:19 am, Blogger ஜயராமன் said...

ம்யூஸ், SK கண்ணன் எல்லோருக்கும் தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

ம்யூஸ் சார்,

///ஓஸியில் நல்ல இலக்கியங்கள் படித்து ரொம்ப நாளாயிற்று ///

என்ன சார் கிண்டலடிக்கிறீர்கள். என் எழுத்தை 'இலக்கியம்' என்றெல்லாம் சொன்னால் யாரும் படிக்க மாட்டார்கள். ஏதோ தோண்றினதை எழுதினேன்.

////இது போன்ற ஏழைகளுக்கு நம்மூரு கம்யூனிஸ்ட்டுகள் உதவுவார்கள் என்று நினைக்கிறேன். ////

உதவலாம் தான். ஆனால் ஒரு சிக்கல். ரஷ்யா இல்லை சீனா என்றால் தாராளமாய் உதவலாம். அரபுக்காரி என்றால் 'நடுநிலை'யாய் உதவலாம். இத்தாலிக்காரி என்றால் இந்தியாவையே கொடுக்கலாம். ஆனால், இந்த அக்கா அமெரிக்காகாரியாச்சே! உதவி கிடைக்காது. சாரி...

///ஜெ.லோ.வை இன்னொருதரம் ஆசை தீர பார்த்துவிட்டு மூடினேன்!!///

SK. இந்த அபசாரம் தீர திருப்புகழை பாராயணம் பண்ணி விபூதி இட்டுக்கொள்ளவும். 'முற்றும் துறந்த' ஜெ.லோ. வை பார்த்து ஞானம் பெறவும்.:-)

கண்ணன் சார்,

////ஜெனி படம் வரவும்... அருகில் என் மனைவி வரவும்... எனக்கு என்ன நடந்திருக்கும்னு அதுக்கு மேல சொல்ல ... வேண்டாம் ///

இதுக்குத்தான் இடம், பொருள், ஏவல் பார்த்து காரியம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கார்கள்.... :-)

அதனால் என்ன, என் பிரண்ட் வாசு மாதிரி 'இந்த படம் பார்த்தால் டயட்டில் இருக்க மோடிவேஷன் என்று வேஷன் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். தாங்களும் படத்தை வீட்டில் மாட்டி வையுங்கள். எனக்கே இது மாதிரி ஒரு ஐடியா இருக்கிறது. :-)

விளையாட்டான என் கருத்துக்கள் இவை. தங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி

 
At 3:48 am, Anonymous Anonymous said...

உங்களை மாதிரி **** ஜன்மங்கள் உங்கள் மன விகாரங்களை தீர்த்துக்கொள்ள இப்படி எந்த படத்தையாவது போட்டு ஏதாவது குப்பையை பேசி வெளிவேஷம் போடுகிறீர்கள்.

இதற்கு என்னவோ பெரிய மனித்த்தனமாக பசப்பல் வேறு அப்பப்ப.

உங்கள் சாதி வண்டவாளங்களை தாங்களே விளக்கியதற்கு நன்றி

இந்த பதிவு நாறுகிறது...

 
At 4:36 am, Blogger dondu(#11168674346665545885) said...

அடப்பாவி மனுஷா, நீங்கள் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியா? தெரியாமல் போய் விட்டதே. நான் 1962-ல் அப்பள்ளியிலிருந்து பள்ளியிறுதித் தேர்வு எழுதி பாஸ் செய்தேன்.

நான் பிறந்தது திருவல்லிக்கேணியில், 23 வயது வரை இருந்ததும் அங்கேதான்.

நேரில் சந்திக்கும்போது இன்னும் பேசுவோம்.

எனது ஜனவரி 30-ஆம் தேதி பதிவைப் பார்க்கவும். நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது நடந்த நிகழ்ச்சியை எழுதியுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Post a Comment

<< Home