Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Sunday, May 28, 2006

எதிர்மறை உலகில் நமது குழந்தைகள்

எதிர்மறை உலகில் நமது குழந்தைகள்

இன்று காலை இன்டியன் எக்ஸ்பிரஸ். வழக்கம்போல, அரசியல், விளையாட்டு தவிர்த்து சென்னை பக்கத்தை புரட்டினேன்.

முதல் ரேங்கில் வந்த பையனின் தந்தையை கேட்கிறார்கள் நிருபர்கள் ‘உங்கள் பையன் வெற்றியின் ரகசியம் என்ன?’.

தந்தையின் பதில் படித்து வியந்தேன்.

‘நான் தினசரி காலையில் பையனை பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். மாலையில் அதேமாதிரி திருப்பி அழைத்து வருவைன். பள்ளியில் அவன் ஒரு சக நண்பர்களோடும் பேசாமல் பார்த்துக்கொள்வேன். அவன் யாரோடும் பழகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பேன். அவர்களால், இவன் கவனம் தப்பி வேண்டாத விழயங்களில் திரும்பாமல் இருந்தான்....’ என்கிறார் அவர்.

என்ன ஆச்சரியம். உண்மையாகவா? இப்பொழுது பையன்களை மற்ற பையன்களிடமிருந்து பாதுகாக்கவா வேண்டியிருக்கிறது!

எந்த கூடல் (association) நன்மை தரவேண்டுமோ, அது எப்படி எதிர்மறையாக ஆகும்!.

கலி ரொம்பத்தான் முத்திவிட்டது. டாக்டர்களிடமிருந்து நமது உடம்பை காக்கவேண்டியிருக்கிறது. (கிட்னியையும் சேர்த்துதான்). வக்கீல்களிடமிருந்து நமது வழக்கை காக்க வேண்டியிருக்கிறது. வைதீகர்களிடமிருந்து நமது இறை நம்பிக்கையை காக்க வேண்டியிருக்கிறது. கரைவேட்டிகளிடமிருந்து தேசத்தை காக்கவேண்டியிருக்கிறது.

பெற்றோர்களின் இப்போது தலையாய தலைவலியே இந்த பிரண்ட்ஸ் சர்க்கிள்தான். என் வீட்டில் சினிமா, சீரியல் டிவி காட்சிகள் கொஞ்சமும் அனுமதி இல்லை. ஆனால், பையன் மன்மத ராசாவிலிருந்து எல்லாம் பாடுகிறான். அர்த்தம் புரியாமல், வார்த்தைகள் தெரியாமல். எல்லாம் ஸ்கூல் சத்சங்கம்தான்.

இப்பொழுதய குழந்தைகள் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.

‘Raising Positive Child in a negative world…” என்ற அருமையான புஸ்தகம் zig zaglar என்பவரால் எழுதப்பட்டது. எப்பொழுதோ படித்தது. அமெரிக்க கலாசார கோரங்களை தழுவி இருந்தாலும் இப்போதய மேல்மட்ட தமிழர்களின் கலாசார குழப்பங்களுக்கு ஒப்பியே இருக்கிறது.

டிவி தான் மிகப்பெரிய வில்லன்.

‘பிள்ளையை தின்னும் புழக்கடை முனியும்’ என்று எப்போதும் காலையில் ஜபிப்போம். குழந்தையில் நான் அப்பாவை கேட்பேன் புழக்கடை முனி எப்படி இருக்கும் என்று. இப்பொழுது அது டி.விதான் என்று தெரிந்து கொண்டேன்.

டிவி குழந்தைகளை மிக தீவிரமாக பாதிக்கிறது என்பதற்கு ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் நிரூபணத்தில் இருக்கின்றன.

ஒரு பழைய 1985ல் அமெரிக்க சர்வேயில் பாருங்கள் (இப்போது 2006ல் இது கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கலாம்...) 75 சதவீத ஜோடிகளின் உறவுகள் (sexual relationships) இல்லறத்துக்கு அப்பாற்பட்டே நடக்கின்றன. 90% தடவை களியாட்டங்களில் மது அருந்துவது போல் காட்டப்படுகிறது. அதாவது மது அருந்துவது a source / celebration of fun என்று பதிக்கப்படுகிறது. அதிலும் கொடுமை, 16 முறை மது வழங்கும்போது அதில் 15 முறை எதிராளியால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதில் நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு கிடையாது.

டிவி பார்க்கும் குழந்தைகள் டிவியை பார்த்து அல்லாத செயல்களை செய்வது ஒரு தாக்கம் என்றால், அதை விட அதிகமாக அவர்கள் செய்யாமல் இருப்பது மனோரீதியாக பெரிய தாக்கம் என்று amercian society of paediatrics ல் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

டிவி பார்க்கும் குழந்தைகள் passive பொழுதுபோக்கையே விரும்புகிறார்கள். அதிக சத்தம் போடும் பாட்டுக்களையே விரும்புகிறார்கள். Interactivity அதிகம் குறைந்துவிடுகிறது.

டிவியில் மிகவும் கொடுமையானது குழந்தைகள் நிகழ்ச்சிகள்தான். இதில் வரும் வன்முறை இவர்கள் மனத்தை வன்முறைக்கு தயாராக்கி விடுகிறது. ஒரு அடி காயம் ரத்தம் என்றால் இவர்கள் சந்தோஷமாக சிரிக்கிறார்கள்.

நாலு குழந்தைகளை சேர்த்தால் அவர்கள் எல்லோரும் இப்பொழுது விளையாட விரும்பாமல் எல்லோரும் சேர்ந்து டிவி பார்க்க உட்காருகிறார்கள். நீங்கள் பையனை டிவியிடமிருந்து தவிர்த்தாலும் நண்பர்கள் விடுவதில்லை.

இனிய மாலைப் பொழுது. நான் பார்க்குக்கு போய் விளையாடலாம் என்று என் வீட்டில் கூடிய குழந்தைகளை சொன்னேன். என் பையனின் நண்பன் என்னிடம் ‘பார்க் போர் அங்கிள். அதே ride, அதே games!. அதே புட்பால்! போரடிக்கும். வேற ஏதாவது டிவி பார்க்கலாமே’ என்றான்.

என்ன கொடுமையடா இது?

நான் படித்தபோது “What is the probability of having 2 consecutive Ace in a pack of cards” என்று ஸ்கூலில் என்னை கேள்வி கேட்டார் வாத்தியார். நான் திணறினேன். ‘நான் சீட்டுக்கட்டை பார்த்தது இல்லை சார். அதில் எத்தனை கார்டு என்று தெரியாது’ என்று அவமானமாக சொன்னேன். வாத்தியார் சிரித்து உட்காரச்சொன்னார்.

அப்பாவிடம் மாலையில் சொன்னேன். ‘அந்த வாத்தி, சீட்டு விளையாட சொல்லி கெடுக்கிறானா பசங்கள. என்ன கிரகசாரம்டா ...’ என்று எங்கப்பா வாத்தியாரை திட்டினார்.

பாஸ்ட் பார்வேட் இப்போ. என் பையன் (9 வயது) பிரண்ட்ஸ் வீட்டிற்கு போய் வந்தான். என்னடா பண்ணினே? என்றேன். ‘ஒரே வெயில் அப்பா. ஒன்னும் பண்ணல. இரண்டு ரவுண்ட் சீட்டு விளையாடினேன்’ என்றான்.

கலி காலமடா சாமி!

15 Comments:

At 11:58 PM, Blogger துளசி கோபால் said...

உண்மையாவே கலி காலம்தான்.
நல்ல பதிவு.

 
At 11:58 PM, Blogger dondu(#4800161) said...

என்ன ஆசரியம் ஜயராமன் அவர்களே,

நான் மூன்றாம் ஆண்டு கணித வகுப்பில் சாத்தியக்கூறு பற்றிய பாடத்தில் சீட்டுக்கட்டு சம்பந்தமான இதே பதிலைக் கூறினேன். எங்கள் கணக்கு பேராசிரியர் "ராகவன் ரொம்பவும் இன்னொசண்ட்" என்று கூறி சிரித்தார்.

இப்போதும் எனக்கு அதே நிலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 11:59 PM, Blogger மணியன் said...

ஜெயராமன், நல்ல பதிவு. டி.வியினால் மாணவர்களின் கவனம் சிதறுவது அவர்கள் வளர்ச்சிக்கு கெடுதலே. உங்கள் இடுகையில் சிறுவர்கள் நாம் விரும்பும் வகையில் வளர்க்க முடிவதில்லை என்ற ஆதங்கம் உள்ளது. அது தேவையற்றது. பன்முகப்பட்ட மக்கள் அமைவது சமுகாயத்திற்கு நல்லது. இன்று நன்றாக மதிப்பெண்கள் வாங்குவதே இலக்காக கொண்டு வாழ்க்கையையே அதை சுற்றி பின்னுகிற நடுத்தரமக்கள் அந்த இலக்கை எட்டியும் நினைத்தவை நடக்கவில்லை யென்றால் தடுமாறிப் போகிறார்கள். இதற்கு பதிலாக தன்னம்பிக்கையை சிறு வயதில் வளர்த்தால் மதிப்பெண்கள் நல்வாழ்விற்கு தடங்கலாகாது.

 
At 12:10 AM, Blogger ஜயராமன் said...

மணியன் சார்,

தொ(ல்)லைக்காட்சியின் பாதிப்பு மதிப்பெண்ணில் அல்ல.

அதைத்தான் இங்கு நான் பதிய விரும்பினேன். அதைத்தான் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

டிவி பார்க்கும் குழந்தைகள் மனரீதியாக மாறுகிறார்கள். சோம்பேறிளாகிரார்கள். அதீதமான ருசி பெற்று விஷயங்களை ரசிக்கிறார்கள்.

மென்மையான விஷயங்களை தவிர்க்கிறார்கள். நுட்பமாக யோசிக்க முடியாதவர்களாகி விடுகிறார்கள்.

இது என் எண்ணம் இல்லை. ஆராய்ச்சிகளின் முடிவு.

தங்கள் பின்னோட்டத்துக்கு மிக்க நன்றி

ராகவன் சார். ஜயராமன் என்று அழைத்தால் போதும், அவர்கள் எல்லாம் போட்டு என்னை அழைக்கவேண்டாம்.

நன்றி

 
At 12:31 AM, Blogger Simulation said...

நகைச்சுவைப் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா அவர்கள் ஒரு பட்டிமன்றத்தில் சொன்னார்.

கேரளாவில் ஒரு மதம் பிடித்த யானை ஒன்று, தனது துதிக்கையால் பாகனைப் புரட்டிப் புரட்டி அடித்துக் கொன்று கொண்டிருந்த காட்சியினை, படம் பிடித்து விலாவாரியாகக் காட்டிக் கொண்டிருந்தது தொலைக்காட்சி.

மகனுடன் இதைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பா உடனே ரிமொட்டை வைத்து சேனலை மாற்றினார்.

உடனே மகன் சொன்னானாம், "அப்பா ஏம்பா, மாத்தறீங்க. சூப்பரா இருக்கு. சச்சின் ஸிக்ஸ்ர் அடிக்கறா மாதிரி யானை அடிக்குது. மறுபடியும் அந்தச் சேனலே போடுங்க".

ராஜா கைதட்டல் வாங்க வேண்டுமென்று கற்பனையாகச் சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால், சைபர் கேஃப்களில், இரத்தம் சொட்டச் சொட்ட வரும் விளையாட்டுகளை, வெறி பிடித்தாற்போல் விளையாடும் சிறுவர்களைப் பார்த்தபின், ராஜா சொன்னத்து உண்மையாக இருக்குமென நம்பினேன்.

- சிமுலேஷன்

 
At 12:42 AM, Blogger ஜயராமன் said...

simulation அவர்களின் கருத்துக்கு நன்றி,

////ஆனால், சைபர் கேஃப்களில், இரத்தம் சொட்டச் சொட்ட வரும் விளையாட்டுகளை, வெறி பிடித்தாற்போல் விளையாடும் சிறுவர்களைப் பார்த்தபின்,////

டிவி கேம்ஸ் என்பது எல்லாவற்றையும் விட பெரிய கொடுமை.

என் வீட்டருகில் மயிலை மாடவீதியில் சந்திரா டிராவல்ஸ் என்று பெரிய டிராவல்ஸ் இருக்கிறது. ஒரு கரைவேட்டிகாரரால் ரொம்ப லாபகரமாக நடக்கிறது. மிக தன்மையான மனிதர்.

இரண்டு மூன்று வருடம் முன்பு அவர் கம்ப்யூட்டர் கபே ஆரம்பித்தார்.

அதில் போனேன் ஒரு தடவை. அங்கு பல குழந்தைகள் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

ரொம்ப பாப்புலர் விளையாட்டு என்ன தெரியுமா? இரண்டு நபர்கள் ஒருத்தரை ஒருத்தர் முட்டி மோதிக்கொண்டு எதிராளியின் உடைகளை களைய வேண்டும். யார் முதலில் களைகிறார்களோ அவர்களுக்கு பாயிண்ட். ஆணோ, பெண்ணோ நீங்கள் உருவத்தை தேர்வு செய்துக்கலாம்.

பிடித்திருக்கிறதா? ஒரு ரவுண்ட் விளை
யாடிப்பாருங்கள். சொக்கிப்போவீர்கள்!!!

நன்றி

 
At 12:46 AM, Blogger பரஞ்சோதி said...

ஜயராமன் சார், அருமையான கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

காலத்திற்கு ஏற்ற மாற்றத்தை நாம் அனுசரித்து தான் போக வேண்டும்.

உலகம் வேகமாக செல்கிறது, அத்துடன் போட்டியிட நம் குழந்தைகளை நாம் தயார் படுத்த வேண்டும்.

அதிக கட்டுப்பாடுகள் வைத்து பிள்ளைகளை பெற்றோர் வளர்த்தால் எதிர்காலத்தில் போட்டி சமுதாயத்தில் வாழ அவர்கள் அதிக சிரமப்படுவார்கள். சுயமாக சிந்தித்து, நல்ல நண்பன் யார்? கெட்டவன் யார் என்பதை அறிய நாம் வாய்ப்பு கொடுக்க வேண்டு, இல்லை என்றால் ஒரு காலக்கட்டத்திற்கு பின்னர் பெற்றோரின் கட்டுப்பாடுகளை விட்டு தனியாக போகும் போது கெட்டுப் போகும் வாய்ப்பும் உண்டு. நான் கண்கூடாக பார்த்தவை.

தொலைக்காட்சி பற்றி நீங்க சொன்னது மிகவும் சரியே, அதை சரியான வழிமுறை கொண்டு தடுக்க வேண்டும்.

பெற்றோர் முதலில் தொலைக்காட்சி பார்ப்பதை குறைக்க வேண்டும், அதற்கு பதிலாக குழந்தைகளோடு அமர்ந்து வீட்டிலேயே சின்ன சின்ன விளையாட்டுகள், அறிவுப்பூர்வமான உரையாடல்கள், தங்கள் அனுபவங்கள், மூதோரின் வாழ்க்கை வரலாற்றை சுவையாக பேசலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒரு சின்ன கிளிப் போட்டார்கள், தாஸ் படம் என்று நினைக்கிறேன், கால்பந்து போட்டியினை காட்டியதால் ஆர்வமாக பார்த்தேன், சிறிது நேரத்தில் ஒரு வீடு, அம்மா அடுப்பில் தோசை சுட்டு டைனிங் டேபிளில் கொண்டு வந்து கொடுக்கிறார், ஒரு சின்ன பெண் குழந்தை சாப்பிட்டு கொண்டு இருக்குது, எதிரே அப்பா (நிழல்கள் ரவி) சட்டையை மாட்டிக் கொண்டு, சிகரெட் பற்ற வைத்து, புஷ் புஷ் என்று புகையை விடுகிறார், எனக்கு சரியான ஆத்திரம், இயக்குநர் மட்டும் அருகில் இருந்தால் திட்டியிருப்பேன். ஏன் அப்படி ஒரு காட்சி, அதிலும் சிகரெட் குடிக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன, முட்டாள்தனமான இயக்கம்.

இது போன்ற சின்னசின்ன விசயங்கள் கூட சிறுவர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும். முடிந்தவரை தொலைக்காட்சிக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, அதுவும் செய்தி, இந்த வார உலகம் போன்ற நிகழ்ச்சிகள் மட்டுமே பார்க்க அனுமதிக்க வேண்டும்.

மதிப்பெண்கள் மட்டுமே குழந்தைகளை உயர்த்தாது, அதற்கு பதிலாக தன்னம்பிக்கை, புத்திக்கூர்மை, சுயமாக சிந்திக்கும் தன்மை, எடுத்த காரியத்தை முடிக்கும் உறுதி, நல்லது கெட்டதை அலசும் தன்மை, நாட்டில், வீட்டில் நடக்கும் விசயங்களை அறிவது போன்றவற்றை வளர்க்க வேண்டும். எழுத படிக்கத் தெரியாத என் தாயார் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம் இது தான்.

 
At 1:02 AM, Blogger பரஞ்சோதி said...

கணினி விளையாட்டிலும் நல்ல நல்ல விளையாட்டுகள் உள்ளன, மூளையை உபயோகித்து புதிர்களை விடுவிப்பது, புதையலை தேடுவது போன்றவை இருக்கின்றன, பெற்றோர் நல்லவற்றை தேர்வு செய்து கொடுக்க வேண்டும், சில நேரங்களில் நண்பர்களிடம் வாங்கி வரும் விளையாட்டுகளை முதலில் பெற்றோர் பார்த்த பின்னரே விளையாட அனுமதிக்க வேண்டும்.

அதற்கு கணினியில் புதிய மென்பொருட்களை உங்கள் அனுமதி இல்லாமல் ஏற்றுவதை தடை செய்ய வேண்டும். அதே போல் தான் இமெயிலும், அவர்களின் பாஸ்வோர்ட் உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

 
At 1:12 AM, Blogger ஜயராமன் said...

பரஞ்சோதி அவர்களே!

தாங்கள் சொல்லுவது ரொம்ப சரி.

ஆனால், இது தன்வீட்டுக்குள்ளேதான் செய்ய முடியும்.

குழந்தைகளின் எல்லா நண்பர்களின் வீட்டிலும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இங்கேதான் பிராப்ளம் ஆரம்பம்.

வளரும் குழந்தைகள் இயல்பாகவே இந்த வன்முறை, குத்தாட்டம் முதலியவற்றில் ஈர்ப்பு வருவது இயற்கை. இதை என்ன பண்ணுவது.

சில வீடுகளில் எல்லா சீரியல்களும் குழந்தைகளை வைத்துக்கொண்டு எல்லோரும் பார்க்கிறார்கள். சிறுவர்களுக்காக எதையும் குறைத்துக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. எப்படியும் பின்னால பார்ப்பான், அதுக்கு இப்போதே பாக்கட்டுமே என்று சப்பைகட்டு கட்டுபவர்களையும் பார்க்கிறேன்.

இதில் சில வயசான கிழங்களின் சீரியல் உத்சாகம் நம்ப முடியாதது.

என் நண்பர் பையன் நடிகர் விக்ரம் வீட்டு பக்கத்து வீடு. ரொம்ப சினிமா பாட்டெல்லாம் அத்துப்படி.


ஒருமுறை வீட்டில் பிரபந்த கிளாஸ் நடுவில் ரெமோரெமோ பாட்டு வந்தது.

ஓடி வந்து டிவியை பார்த்து ஆடிவிட்டு பின்னால் திரும்பிப்போனான்.

இது கெட்ட விஷயமா இல்லை நல்லதா என்று எனக்கு புரியவில்லை.

நன்றி

 
At 1:35 AM, Blogger பரஞ்சோதி said...

ஜயராமன் சார்,

நம் குழந்தைகள் யார் யார் வீட்டிற்கு சென்று வருகிறார்கள், அவர்களின் பெற்றோர் யார் யார் என்பதை நாம் அறிந்து நாமும் அவர்களோடு நட்பு பாராட்ட வேண்டும்.

வாரம் ஒருமுறை அனைவரும் ஒன்று கூடி பேச வேண்டும், ஏற்றத்தாழ்வுகள் பார்க்கக்கூடாது, அப்படி பேசும் போது நம் கருத்துகளை அவர்களும் சொல்லலாம். அவர்களும் பின்பற்றலாம். இவ்வாறு பெற்றோரும் நட்பாக இருக்கும் போது பிள்ளைகளும் நல்லபடியாக வளர்வார்கள்.

நிறைய பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார், நண்பர்களின் பெற்றோர் யார், அவர்களின் குடும்ப சூழ்நிலை என்ன? எங்கே இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கிடையாது, நேரமும் கிடையாது.

சினிமா பாடல்களை அறிந்திருப்பது, நடனம் ஆடுவது ஒன்றும் தவறு இல்லை. அவர்களின் ஆர்வத்தை நாம் தடை செய்யக்கூடாது. வீட்டில் புதியவர்கள் பலர் இருக்கும் போது ஒரு சிறுவன் வந்து நடனம் ஆடுகிறான் என்றால் அவன் தன்னம்பிக்கை மிக்கவன் என்றே சொல்வேன்.

 
At 1:37 AM, Blogger Simulation said...

>>இதில் சில வயசான கிழங்களின் சீரியல் உத்சாகம் நம்ப முடியாதது.<<

பல பெருசுங்கள், இந்த வக்ரமான சீரியல்களை, ஒரு நாள் கூட விடாமல், தொடர்ந்து (வால்யூமையும் குறைக்காது) பார்க்கிறார்கள். சில நேரங்களில் சிறிசுகள், தலையில் அடித்துக் கொண்டும் செல்லும். சற்றும் கூச்சமின்றி, குடும்பத்துடன் இந்த சீரியல்களைப் பார்க்கும் இவர்களைப் பற்றி, ஆராய்ச்சியோ அல்லது தனிப்பதிவோ போடலாம்.

 
At 1:40 AM, Blogger tbr.joseph said...

ஜயராமன்,

இந்த பதிவைப் படித்ததும் எனக்கு தோன்றியதை எழுத ஒரு தனிப்பதிவே வேண்டியிருக்கும்.

அந்த முதலாவதாக வந்த மாணவனின் தந்தையின் ஒரே குறிக்கோள் தன்னுடைய மகன் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்பதுதானோ என்னவோ..

நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கிறிஸ்த்துவ பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் யாருமே மாநில அளவில் ரேங்க் வாங்குவதில்லை. அப்படியே தப்பித்தவறி வாங்கினாலும் நூற்றில் ஒன்று அல்லது இரண்டு இருக்கும்.

இதைக்குறித்து என்னுடைய மகள் படித்த சர்ச் பார்க் கான்வெண்ட் எச்.எம் சிஸ்டரிடத்தில் ஒருமுறை கேட்டேன்.

அதற்கு அவர்கள் சொன்ன பதிலை இங்கு வைக்கிறேன்.

ஒரு சிலர் அதை ஏற்றுக்கொள்ளலாம்.. பலர் அதை எதிர்க்கலாம்.

அவர் சொன்னது..

நாங்க பிள்ளைகள ஒரு ஆல்ரவுண்டரா வளர்க்கத்தான் விரும்பறோம். எங்களிடம் பயிலும் எல்லா மாணவர்களும் போர்ட் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பது எங்களுடைய முதற் குறிக்கோள். படிப்பில் மட்டுமல்லாமல், பேச்சு போட்டி, எழுத்து போட்டி, விளையாட்டு, இசை, நடிப்பு என ஏறத்தாழ எல்லா துறைகளிலும் பிள்ளைகள் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக வேண்டும் என்பதுதான் முக்கியம்.

சக மாணவர்களுடன் கலகலப்பாக பழகாத மாணவர்களை கவனித்து திருத்துவதிலும் எங்களுடைய கவனம் இருக்கும்.

வீட்டுப்பாடம் என்பது எட்டாம் வகுப்பு வரை மட்டும்தான் இருக்கும். அதன் பிறகு நோட்ஸ் கொடுக்கும் பழக்கத்தையும் குறைத்துவிடுகிறோம். மாணவர்கள் புத்தகங்களில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து எழுதும் பழக்கத்தை குறைக்கச் சொல்லி வலியுறுத்துகிறோம். மாணவர்கள் அவர்களுடைய சொந்த மொழியிலேயே பதில் எழுதும் திறனை ஊக்குவிக்கிறோம். ஆனால் விடைத்தாட்களை திருத்தும் ஆசிரியர்களில் சிலருக்கு அது பிடிப்பதில்லை.. பாடப்புத்தகத்திலிருப்பதை அப்படியே எழுதும் மாணவர்கள் மாநிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுகிறார்கள்..

ஆனால் அவர்கள் மேற்படிப்புக்கு செல்லும்போதோ அல்லது வேலைக்காக நேர்காணல்களுக்கு செல்லும்போதோ.. எப்படி பரிணமிக்கிறார்கள் என்பது நிச்சயம் கேள்விக்குறியாகத்தான் இருக்கும்..

படிப்பு மிகவும் அவசியம் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.. ஆனால் ஒரு மாணவன் படிப்பில் மட்டும் சிறந்து விளங்கினால் வாழ்க்கையில் வெற்றிபெறுவான் என்பது நிச்சயமில்லை..

வாழ்க்கையில் வெற்றி பெற புத்திசாலித்தனமும் வேண்டும்.. அதற்கு புத்தக அறிவு மட்டும் போறாது..

தொலைக்காட்சியால் கவனத்தை சிதறவிடும் எந்த குழந்தையும் வாழ்க்கையில் வேறெந்த சிறிய விஷயங்களிலும் கவனத்தை சிதறவிட்டு வழிதவறிப்போவது சாத்தியம்..//

என் பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்த சமயத்திலும் என்னுடை கேபிள் கனெக்ஷனை கட் செய்ததே இல்லை.. டிவி பார்ப்பது அத்தனை பெரிய குற்றமும் இல்லை..

எந்தெந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை குழந்தைகளே தீர்மானிக்க சிறுவயது முதலே பயில்விக்க வேண்டும்.. எந்த ஒரு விஷயத்தை செய்யாதே என்கிறோமோ அதைத்தான் குழந்தைகள் முதலில் செய்யும்..

 
At 1:42 AM, Blogger tbr.joseph said...

ராஜா கைதட்டல் வாங்க வேண்டுமென்று கற்பனையாகச் சொன்னாரா என்று தெரியவில்லை. //

நிச்சயம் அப்படித்தான் இருக்கும்..

பட்டிமன்றம் என்பது இப்போதெல்லாம் பொறுப்பில்லாதவர்கள் பேசும் மன்றமாகிவிட்டது. அவர்களுக்கு பார்வையாளர்களை சிரிக்க வைப்பதுதான் குறி.. சிந்திக்க வைப்பதல்ல..

அப்படி அவருடைய மகன் கூறினான் என்றால் அவருடைய வளர்ப்பில்தான் ஏதோ குறையிருக்கிறது..

 
At 11:04 AM, Blogger மணியன் said...

ஜெயராமன், அழகான கருத்துக்களை கூறும் உங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம். நான் உங்களை யாழிசை செல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன்.
உங்கள் விருப்பு வெறுப்புகளை ஒரு பதிவாக்கி வெளியிடுங்கள்.

 
At 6:33 PM, Blogger arunagiri said...

எனக்கென்னவோ ஜோசப் சார் சொல்வதுதான் சரியெனப்படுகிறது. முதல் மார்க்கைவிட ஆளுமை குறித்த ஆரோக்கிய மனப்பான்மையை மாணவர் மனத்தில் வளர்ப்பதில் கல்விக்கூடங்கள் கவனம் செலுத்த வேண்டும். டிவியை limit செய்யலாம். ஒரேயடியாகக் கட் செய்வது போன்ற தீவிர நடவடிக்கைகள் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும். பாடல்களில் ஆபாசம் தூக்கல்தான்- அவை inappropriate என்று பிள்ளைகளுக்கு அறிவுறுத்தி அவர்களையே சேனலை மாற்றி விடச் சொல்வதும் நல்லது.

 

Post a Comment

<< Home